ஒளவைபெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகள்! திருக்குறளின் ஒற்றைச் சொல்லின் விளக்கமாக



திருவள்ளுவப் பெருந்தகை, நமக்கான தலைஎழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதாக,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 

திண்ணிய ராகப் பெறின்

என்ற குறளில், தெரிவிக்கிறார்.

எது கேட்டாலும் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமல் இருப்பது நீங்கள்தான் என்று நம்முடைய தலைஎழுத்தை வெற்றிக்கோ தோல்விக்கோ அமைத்துக்கொள்வது நாம்தாம் என்று தெரிவிக்கிறார்.

அதில் நமக்குத் தேவையான பொருட்களை (விசும்பில்) கேட்டுப்பெற, நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாக திண்ணியராகுக என்கிறார்.

திருவள்ளுவர் தெரிவிக்கிற அந்த திண்ணியராதலுக்கான நடைமுறை என்ன என்பதை ஒளவைப் பெருமாட்டி தனது பனிரெண்டு உயிரெழுத்துத்துத் தொடர்களிலும் ஒரு ஆய்த எழுத்துத் தொடரிலும் அமைத்து, திண்ணியராதலுக்கு நமக்கான பதின்மூன்று கட்டளைகளைத் தருகிறார்.

1. அறம் செய விரும்பு 

உங்கள் தலை எழுத்தை நீங்களே எழுதிக் கொள்கின்றீர் என்பதே தமிழ்முன்னோரின் தெளிந்த முடிவு. அதனால் உங்களுக்கான அறத்தை நீங்களே செய்ய விரும்புங்கள். 

2. ஆறுவது சினம்

உங்களுக்கு யார்யாரோ கெடுதி செய்வதாக, நீங்கள் கொள்ளுகிற சினத்தால், எதையும் உங்களால் மாற்றிவிட முடியாது. சினமும் ஆறிவிடும். ஆனால் உங்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த புலம்பலே உங்களுக்கான விதியாக, நீங்கள் விரும்புதாக விசும்பு நினைத்துக் கொண்டு, உங்களை புலம்பலிலேயே இருத்திவிடும். சினம் கொள்வதை நிறுத்துங்கள் என்பதே இதன் விளக்கம் ஆகும்.

3. இயல்வது கரவேல்

உங்களால் முடியும் என்கிற உங்கள் திறமைகளை மறைக்காதீர்கள்ள; மறக்காதீர்கள். முடிந்ததை மறைக்கக் கூடாது என்பதையே இயல்வது கரவேல் என்கிறார் ஒளவை பெருமகள்.

4. ஈவது விலக்கேல்

எக்காரணம் பற்றியும் கொடுப்பதை விலக்கவேண்டாம். நீங்கள் ஒருவருக்கு உதவும் போது, அதில் உள்ள ஈவது என்கிற தலைப்பு உங்களின் ஈதல் ஒன்றுக்குப் பத்தாக படர்க்கையில் கிடைக்கச் செய்யும்.

5. உடையது விளம்பேல்

உங்களுக்குள்ள வலிமைச் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே.

உங்களுக்குள்ள மெல்லியல்பாடு எதையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.

6. ஊக்கமது கைவிடேல்

நீங்கள் செய்த அறத்தின் விளைவுக்கான காலத்தை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. காலம் கருதியிருந்து, பயன் தள்ளிப்போகும் நிலையில், ஊக்கத்தைக் கைவிட வேண்டாம்.

7. எண் எழுத்து இகழேல்

நீங்கள் உங்களுக்காக செய்யும் அறத்திற்கு (விதி) எண்ணமும் மொழியும் அடிப்படையாகும். அயல்களை மலைத்து உன்மொழியை ஒருபோதும் இகழவேண்டாம். மொழிப்பற்றை ஒருபோதும் விடாதே.

8. ஏற்பது இகழ்ச்சி

உனக்கான உணவு, உனக்கான மொழி, உனக்கான பண்பாடு எதையும் பிச்சையாக ஏற்பது உனக்கான இழிவு ஆகும்.

9. ஐயம் இட்டு உண்

இந்தப் (நமது விளைவிப்பு) பொருளை ஏன் உண்ணவேண்டும்? இந்தப் பொருளின் பின்னால் இருக்கிற ஆதாயம் என்ன? அந்தப் (அயல் விளைவிப்பு) பொருளை ஏன் உண்ணக்கூடாது? அதில் இருக்கிற உண்ணவைப்பு அரசியல் என்ன? என்றெல்லாம் ஐயத்தை முன்னிறுத்தி தெளிவு பெற்று உண்பது உடல் நலத்திற்கானதும், இன நலத்திற்கானதும் ஆகும். 

10. ஒப்புரவு ஒழுகு

ஒப்புரவு என்பது- பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்கிற சமூகநீதி ஆகும். அதில் விட்டுக் கொடுத்தல் இல்லாமல் ஒழுக வேண்டும்.

11. ஓதுவது ஒழியேல்

அறம் செய்வதில் தொடங்கி ஒப்புரவு ஒழுகுதல் வரையிலும், அடுத்து பார்க்க இருக்கிற இரண்டு கட்டளைகளின் அடிப்படையில் நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக கேட்பதே ஓதுவது ஆகும்.

12. ஒளவியம் பேசேல்

ஒருவரிடமும் பொறாமை கொண்டு விடாதே. உங்கள் பொறாமையை அவர்கள் புறக்கணிக்கும் போது, சிறப்பாகச் சொன்னால் பொறுத்தருளும் போது உங்கள் பொறாமை உங்களை நோக்கித் திரும்பிவிடும்.

13. அஃகஞ் சுருக்கேல்

உயிர் எழுத்துக்களில் சொல்லபபட்ட இந்த பனிரெண்டு கட்டளைகளும் அறிவு அல்லது அறம் அல்லது உயிர் சார்ந்தது. உயிர்வாழ கட்டாயம் மெய்யும் தேவை. உங்கள் உடம்பை காக்க உரிய நேரத்தில் கட்டாயம் உணவு உண்ண வேண்டும். எக்காரணம் பற்றியும் வயிற்றை காயப்போடாதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குச்சந்தை வருமானம்

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

இயங்கலையில் வருமானம் ஈட்ட நான்காவது நிறுவனம்